ஐசிசியின் சமீபத்திய தரவரிசைப் பட்டியலால் கிரிக்கெட் ரசிகர்கள்வியப்படைந்துள்ளனர். ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது, ஆனால் ஐசிசி தரவரிசையில் இந்தியாவால் முதல் இடத்தை அடைய முடியவில்லை. மறுபுறம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் 5வது போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்ததை அடுத்து, தரவரிசையில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடித்தது.

இந்த போட்டியில் தோல்வியடைந்து தொடரை இழந்த ஆஸ்திரேலியா தரவரிசையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. சூப்பர் ஃபோர் கட்டத்தில் வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது, 3 வடிவங்களிலும் முதலிடத்தை எட்டும் இந்தியாவின் பொன்னான வாய்ப்பை இழந்தது. அந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் இந்தியா முதலிடத்தை பிடிக்க முடிந்திருக்கும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் 115 ரேட்டிங்கை பெற்றுள்ளன. ஆனால் தரவரிசையில் உள்ள மற்ற அளவுகோல்களை (போட்டிகள்மற்றும் புள்ளிகள்) கணக்கில் எடுத்துக்கொண்டு, பாகிஸ்தான் முதல் இடத்தை எட்டியுள்ளது. ஒருநாள் தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கும் இந்தியா, டெஸ்ட் மற்றும் டி20 தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது. இந்த வாரம் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா சிறப்பாக செயல்பட்டால், 3 வடிவங்களிலும் முதல் இடத்தை எட்ட முடியும்.