உள்நாட்டில் கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை உயர்ந்ததை தொடர்ந்து கையிருப்பில் உள்ள கோதுமையை விடுவிக்க உள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது. இந்திய மாவு ஆலைகள் இந்த முடிவை வரவேற்றுள்ளது. இந்நிலையில் மாவு ஆலைகள் கூட்டமைப்பின் தலைவர் பிரமோத் குமார் பி.டி.ஐ செய்து நிறுவனத்திடம் கூறியதாவது, மத்திய அரசு கையிருப்பு கோதுமையை விடுவிக்க முடிவை ஒரு மாதத்திற்கு முன்பாக எடுத்திருந்தாலும் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். இருப்பினும் தற்போது சரியான முடிவை மேற்கொண்டுள்ளது. இதன் மூலமாக சந்தையில் கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை ரூ.5 முதல் ரூ.6 வரை குறைய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இதே காலகட்டத்தில் கோதுமை விலை கிலோ ஒன்றிற்கு ரூ.28.24 ஆகவும் கோதுமை மாவு விலை கிலோ ஒன்றிற்கு ரூ.31.41 ஆகவும் இருந்தது. ஆனால் தற்போது ஒரு கிலோ கோதுமை ரூ.33.43 ஆகவும் ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.37.95 ஆகவும் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு விடுவிப்பதாக கூறியுள்ள 30 லட்சம் டன் கோதுமையையும் அடுத்த இரு மாதங்களில் படிப்படியாக பொது சந்தையில் விற்பனைக்கு வரும். இதன் காரணமாக நாட்டில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேப்போல் 2021 – 2022 அறுவடை பருவத்தில் இந்தியாவின் கோதுமை உற்பத்தி 106.84 மில்லியன் டன்னாக குறைந்தது. பல்வேறு மாநிலங்களில் வீசிய வெப்ப அலை காரணமாக பயிர்கள் கருகியதே இதற்கான காரணமாகும். அதேபோல் முந்தைய ஆண்டில் கோதுமை உற்பத்தியானது 109.59 மில்லியன் டன் இருந்தது. ஆனால் நடப்பு சாகுபடி பருவத்தில் கூடுதல் பரப்பளவில் கோதுமை பயிரிடப்பட்டிருப்பதால் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.