
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைக்கிறது. பல்வேறு இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகிறது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் இன்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழெடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு ஏப்ரல் 2-ம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், விருதுநகர், தென்காசி, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோன்று ஏப்ரல் 3ஆம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் வருகிற 3 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.