தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் என்பது அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் மக்கள் வெயிலின் தாக்கத்தினால் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு அநாவசியமாக வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் தற்போது கத்திரி வெயில் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது. இதன் காரணமாக மின்சார தேவையும் அதிகரித்துவிட்டது. இந்நிலையில் கோடை வெயிலை முன்னிட்டு அரசு இலவசமாக ஏசி கொடுக்க இருப்பதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதாவது மத்திய அரசு 5 ஸ்டார் ஏசியை வழங்குவதாகவும் இதனை மாநில அரசின் இணையதளங்களின் மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்த செய்திகளில் தகவல் இருக்கிறது. இது தொடர்பான ஒரு வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருவதால் தற்போது தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் அதிகாரபூர்வ உண்மை சரிபார்ப்பு அமைப்பானது வெளியிட்டுள்ள பதிவில், இது முற்றிலும் வதந்தி. மத்திய அரசு இப்படி எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இதில் உண்மை இல்லை என மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகமும் மறுத்துள்ளது.

எனவே இதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய காலகட்டத்தில் மோசடிகள் என்பது அதிகரித்து விட்டதால் பொதுமக்கள் இது போன்ற செய்திகளில் இருந்து உஷாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.