பீகார் மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் அதிகப்படியான வெயிலின் காரணமாக ஒரு பள்ளியில் படிக்கும் மாணவிகள் அடுத்தடுத்து திடீரென மயக்கமடைந்து விழுந்தனர். இந்த மாணவிகளுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டு முதலுதவி வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சதார் மருத்துவமனையின் மருத்துவராக இருக்கும் ரஜினிகாந்த் குமார் மாணவிகள் மயக்கமடைந்து விழுந்தது தொடர்பாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, அதிகரிக்கும் தொடர் வெப்பத்தால் மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகள் தற்போது நலமுடன் இருக்கிறார்கள். எப்போதும் மாணவர்கள் உடலில் நீர்ச்சத்தை சரியான முறையில் வைத்திருக்க வேண்டும். முடிந்த அளவுக்கு தண்ணீர் குடிப்பதோடு வெளியே வராமல் இருக்க வேண்டும். மேலும் எங்கு சென்றாலும் மாணவர்கள் அனைவரும் தண்ணீர் பாட்டிலை உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.