
டெல்லியில் ஹவுஸ் ஹாஸ் என்ற பகுதியில் மான் பூங்கா ஒன்றில் நேற்று காலை 6.30 மணிக்கு காதல் ஜோடிகள் இருவர் மரத்தில் தூக்குப் போட்டு உயிரிழந்ததாக அங்குள்ள காவலாளி ஒருவர் போலிசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் அங்கு வந்து மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த உடல்களை மீட்டனர்.
பின்னர் அந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தூக்கில் தொங்கிய வாலிபர் (வயது 21) கருப்பு டி-ஷர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தார்.
அவர் பீஸா கடை ஒன்றில் வேலை செய்பவர்,அவருடன் இருந்த பெண் (வயது 18) பச்சை நிற சுடிதார் அணிந்திருந்தார் என்று தெரியவந்துள்ளது. இருவரும் காதலித்து வந்ததாகவும் அவர்களது காதலுக்கு பெற்றோர்கள் மறுத்து தெரிவித்ததால் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்று போலீசார் யூகித்துள்ளனர்.
ஆனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இந்த காதல் ஜோடியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவர்கள் கொல்லப்பட்டு பின்பு தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர். ஏனென்றால் அந்த மரம் மிக உயரமானது, அதில் இருவரும் மேலே ஏற வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.