ராஜஸ்தான் மாநிலம் சங்கானேர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பிரியா சேத் மற்றும் ஹனுமான் பிரசாத் ஆகிய இருவருக்கும் இடையே சிறைவாசத்தின் போது காதல் மலர்ந்துள்ளது. இதில் பிரியா சேத், டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான இளைஞரைத் திட்டமிட்டு கொலை செய்த வழக்கில் கைதானவர். அதேபோல், ஹனுமான் பிரசாத் என்பவர் தனது முன்னாள் காதலியின் கணவர் மற்றும் அவரது குழந்தைகளைக் கொலை செய்த கொடூரக் குற்றத்திற்காகத் தண்டனை பெற்று வருகிறார். சிறை விதிகளைப் பின்பற்றி வந்த இவர்களுக்குள் ஏற்பட்ட இந்த ஈர்ப்பு, இறுதியில் திருமண முடிவை நோக்கிச் சென்றுள்ளது.
தங்கள் காதலைத் திருமணத்தில் முடிக்க விரும்பிய இந்த ஜோடி, பரோல் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகியது. இவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், திருமணச் சடங்குகளை முடிப்பதற்காக 15 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். திருமண ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு, பரோல் காலம் முடிந்தவுடன் இருவரும் மீண்டும் தங்கள் தண்டனையைத் தொடர சிறைக்கே திரும்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
