கர்நாடக மாநிலத்தில் உள்ள கலாபுராகி மாவட்டம் சைனமகேரா கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தவர் ஏழு வயது சிறுமி மகந்தம்மா சிவப்பா ஜமாதார். இவர் பள்ளி நடை பாதையில் தனது தோழிகளுடன் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் மதிய உணவுக்காக தயார் செய்த கொதிக்கும் சாம்பாரை ஊழியர்கள் வெளியில் எடுத்து வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி சாம்பாருக்குள் தவறி விழுந்து அவர் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியை மீட்டு கலாபுராகி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அன்றைய தினம் பள்ளியில் இருந்த பொறுப்புத் தலைமை ஆசிரியர் ராஜூ சவான் மற்றும் விடுப்பில் இருந்த தலைமை ஆசிரியை லலாபி நடாப் ஆகிய இருவரையும் பள்ளி கல்வித்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் தலைமை சமையல்காரரான கஸ்தூரிபாய் என்பவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.