ஆட்கடத்தல், நிதி மோசடி, கற்பழிப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் எனப் பல வழக்குகளில் சிக்கி இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய சாமியார் நித்தியானந்தா, தான் உருவாக்கியதாகக் கூறி வந்த ‘கைலாசா’ நாட்டின் முகவரியை பல ஆண்டுகள் கழித்து முதன்முறையாக தற்போது வீடியோ மூலம் அறிவித்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு தனது சீடர்களுடன் இந்தியாவில் இருந்து தலைமறைவான நித்தியானந்தா, வெளிநாடுகளில் பதுங்கிக்கொண்டு கிராஃபிக்ஸ் செட்டிங்குகளுடன் யூடியூப் நேரலைகளில் பேசி வந்தார்.

தொடர்ந்து ‘கைலாசா’ என்ற தனி தேசத்தை உருவாக்கிவிட்டதாகவும், அதற்கான அதிபர், அமைச்சர்கள், தனி வங்கி மற்றும் தனி நாணயம் வரை அனைத்தையும் அறிவித்த போதிலும், அந்த நாடு எங்கு அமைந்திருக்கிறது என்ற தகவலை மட்டும் பொதுவெளியில் வெளிப்படுத்தாமல் ரகசியமாகவே வைத்திருந்தார்.

​இந்நிலையில், தற்போது வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் தனது ‘கைலாசா’ நாடு எங்குள்ளது என்ற அதிர்ச்சி தகவலை நித்தியானந்தா வெளியிட்டுள்ளார். அதன்படி, மேற்கு ஆப்பிரிக்கா கண்டத்திற்கு அருகே அட்லாண்டிக் பெருங்கடலோரம் அமைந்துள்ள ‘கினியா பிசாவ்’ (Guinea-Bissau) பகுதியில் தான் கைலாசா நாடு அமைந்துள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

பல வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இருந்து கொண்டு, அட்லாண்டிக் கடலோரம் தனி நாட்டை உருவாக்கியிருப்பதாக நித்தியானந்தா வெளியிட்டுள்ள இந்த விசித்திரமான வீடியோவும் தகவலும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, இணையவாசிகளிடையே பெரும் சிரிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.