சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியை சேர்ந்த கார்த்திக் ரகுநாத் என்பவர் பங்கு சந்தை தொடர்பான வேலை செய்து வந்துள்ளார். இவர் ஐஸ்வர்ய லட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. கடந்த 12ம் தேதி ஐஸ்வர்யா லட்சுமிக்கு மீண்டும் ஒரு குழந்தை பிறந்த நிலையில் அவர் மருத்துவமனையில் உள்ளார். நேற்று முன் தினம் கார்த்திக் ரகுநாத் மருத்துவமனைக்குச் சென்று குழந்தையை பார்த்துவிட்டு வீடு திரும்பிய பிறகு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பங்குச்சந்தையில் பணத்தை இழந்ததாகவும் அதனால் பலரிடம் கடன் வாங்கியதாகவும் தெரியவந்தது. மேலும் தனது தந்தை தனசேகரனிடம் வீட்டை விற்று பணம் தரும்படி அவர் கேட்டு வந்துள்ளார். அதற்கு தந்தையும் மறுப்பு தெரிவித்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பரிதவித்து நிற்கின்றனர்.