தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.எஸ். அழகிரியின் மனைவி ஏ. வத்சலா (65), உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11) காலமானார்.

நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த அவரது மறைவுச் செய்தி கேட்டு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மறைந்த வத்சலாவுக்கு 4 மகள்கள் உள்ளனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகச் சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம், திருப்பணிநத்தம் கிராமத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகள் இன்று (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்குச் சொந்த ஊரில் நடைபெறவுள்ளன. வத்சலாவின் மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.