உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், “பக்கோடா” வாங்கி வரச் சொல்லி கணவரை ஏமாற்றிவிட்டு, புதுமணப் பெண் ஒருவர் தனது காதலனுடன் பேருந்து நிலையத்திலிருந்து மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிதம் சிங் என்பவருக்கும், ரிம்ஜிம் என்ற பெண்ணுக்கும் கடந்த டிசம்பர் 1, 2025 அன்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு ராம்பூரில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றிருந்த ரிம்ஜிமை, அவரது கணவர் பிதம் சிங் மீண்டும் தனது வீட்டிற்குப் பேருந்தில் அழைத்து வந்து கொண்டிருந்தார். மார்ச் 9-ம் தேதி மதியம் பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றபோது, தனக்குப் பக்கோடா வேண்டும் என ஆசையாகக் கூறி கணவரை ரிம்ஜிம் வெளியே அனுப்பியுள்ளார்.

மனைவியின் ஆசையை நிறைவேற்றப் பக்கோடா வாங்கிக் கொண்டு கணவர் திரும்பி வந்தபோது, பேருந்து இருக்கையில் ரிம்ஜிம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது, ரிம்ஜிம் யாரிடமோ செல்போனில் பேசியபடி பேருந்தை விட்டு இறங்கிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து பிதம் சிங் அளித்த புகாரின் பேரில், இம்ரான் என்ற இளைஞருடன் ரிம்ஜிம் ஏற்கனவே தொடர்பில் இருந்ததும், திட்டமிட்டே இந்தத் தப்பித்தல் அரங்கேறியதும் அம்பலமாகியுள்ளது. தற்போது சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களைக் கொண்டு மாயமான பெண்ணையும் அவரது காதலன் இம்ரானையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
