கேரளாவில் குளிக்கும்போது மூக்கின் வழியாக மூளையை தின்னும் அமீபா உடலில் நுழைந்த 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

கேரளாவின் ஆலப்புழாவில் 15 வயது சிறுவன் மூளையில் தொற்று ஏற்பட்டு  உயிரிழந்தான். அசுத்தமான நீரில் காணப்படும் ஒரு வகை அமீபாவே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த அமீபா மூக்கு வழியாக இறந்தவரின் மூளையை சென்றடைந்தது. அசுத்தமான நீரில் குளிப்பதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியதாவது,ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பனவல்லியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ‘பிரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்’ (பிஏஎம்) நோயால் பாதிக்கப்பட்டான்.

இந்நிலையில், அசுத்தமான தண்ணீரில் குளிப்பதை தவிர்க்குமாறு, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சிறுவனின் மரணத்தை உறுதிப்படுத்திய அமைச்சர், இந்த அரிய நோயின் 5 கேஸ்கள் இதற்கு முன்னர் மாநிலத்தில் பதிவாகியிருந்ததாகக் கூறினார்.

திருவனந்தபுரத்தில் அவர் கூறியதாவது: 2016ல் ஆலப்புழாவின் திருமலை வார்டில் முதல் கேஸ் பதிவாகியுள்ளது. 2019 மற்றும் 2020ல் மலப்புரத்தில் இரண்டு கேஸ்களும், 2020ல் கோழிக்கோடு மற்றும் 2022ல் திருச்சூரில் ஒரு கேஸும் கண்டறியப்பட்டது..

காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் வலிப்பு ஆகியவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும். ‘தொற்று நோயாளிகள் அனைவரும் இறந்துவிட்டனர்.’ இந்த அரிய மூளை நோய்த்தொற்றில் இறப்பு விகிதம் 100 சதவீதம் என்று அவர் கூறினார். தேங்கி நிற்கும் நீரில் காணப்படும் சுதந்திரமான அமீபாவால் தொற்று ஏற்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, சுதந்திரமாக வாழும், ஒட்டுண்ணி அல்லாத அமீபா பாக்டீரியா மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும் போது மனித மூளை பாதிக்கப்படும். இது ஒரு கொடிய நோய், இதனைக் கருத்தில் கொண்டு அசுத்தமான தண்ணீரில் குளிப்பதை தவிர்க்குமாறு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.