
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் செய்த சாதனைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
ராகுல் டிராவிட் தலைமையில் செயல்பட்டு வந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு 2007 ஆம் ஆண்டு எம் எஸ் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். 9 ஆண்டுகள் ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாகவும் ஆறு ஆண்டுகள் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாகவும் இந்திய அணிக்கு ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். தோனி தலைமையிலான இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்றது.
2010 மற்றும் 16ஆம் ஆண்டுகளில் நடந்த ஆசிய கோப்பை போட்டிகளில் பட்டங்களை வென்றது இந்திய அணி. 1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு நாள் போட்டிக்கான உலகக்கோப்பை இந்திய அணிக்கு கனவாக இருந்தது. அதனை 2011 ஆம் ஆண்டு பெற்றுக் கொடுத்தது தோனியின் தலைமை என்று கூறலாம். 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன் கோப்பையும் இந்திய அணி வெல்ல தோனி காரணமாக இருந்தார். இதன் மூலம் மூன்று விதமான ஐசிசி கோப்பையை வென்ற ஒரே கேப்டன் எம் எஸ் தோனி என்ற பெருமையை பெற்றார்.
விளையாட்டில் சாதனை புரிந்ததற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த கேழ் ரத்னா விருது எம் எஸ் தோனிக்கு வழங்கப்பட்டது. அதேபோன்று 2009 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் 2018 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் தோனிக்கு வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் அந்தஸ்து எம்எஸ் தோனிக்கு வழங்கப்பட்டது. கேப்டன் கூல் என ரசிகர்களால் அழைக்கப்படும் தோனி இந்திய அணியில் இருந்து விலகி இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூலம் ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறலாம். சாதனைகளின் மன்னன் சரித்திர நாயகனாக விளங்கும் தோனி தனது 42வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.