விராட் கோலியின் கேப்டன்சி ஸ்டைலை தான் ரோஹித் சர்மா பின்பற்றி வருவதாக இந்திய அணியின்  முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார்..

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா அணியை ரோஹித் சர்மா கேப்டனாக இருந்து வழிநடத்தி வரும் நிலையில், அவரது கேப்டன்ஷிப் குறித்து முன்னாள் வீரர்  கவுதம் கம்பீர் முக்கிய கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய கம்பீர், உண்மையாக சொன்னால் ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்பதை நம்புவதாகவும், ஆனால் ரோகித் சர்மா தனது கேப்டன்சியில் விராட் கோலி உருவாக்கிய டெம்ப்ளேட்டை தான் பின்பற்றி வருகிறாரே தவிர அவருக்கு என தனி ஸ்டைல் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் ரோகித் சர்மா கேப்டன்சி ஸ்டைலுக்கும், விராட் கோலி ஸ்டைலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை எனவும், இந்திய அணியை விராட் கோலி மிகச் சிறப்பாக வழி நடத்தியதாகவும்  கூறியுள்ளார். அஸ்வின் மற்றும் ஜடஜாவை விராட் கோலி எப்படி சிறப்பாக பயன்படுத்தினாரோ அதையே தான் ரோஹித் சர்மாவும் பின்பற்றுகிறார் எனவும், ரோஹித் சர்மாவுக்கு உண்மையான சவால் என்பது வெளிநாடு சுற்றுப்பயணத்தில் காத்திருக்கிறது என்று கூறிய கம்பீர், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா இங்கிலாந்து செல்லும்போதுதான் ரோஹித் சர்மா  மிகப்பெரிய சவாலை சந்திப்பார் என தெரிவித்துள்ளார்.