மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ‘கரீப் நகர்’ குடிசைப் பகுதியில் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்ட அதிரடி இடிப்பு நடவடிக்கையால், அங்கு வசித்து வந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடின்றி வீதியில் தவிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படத்தின் குழந்தை நட்சத்திரங்களான அசாருதீன் மற்றும் ரூபினா அலி ஆகியோரின் வசிப்பிடமாக அறியப்பட்ட இப்பகுதியின் மீது நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில், 500-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.

இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தை மற்றும் இளம் கலைஞர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் பணியாற்றி வந்த இந்தச் சிறுவர்கள், தங்களின் வாழ்வாதாரத்தையும், படப்பிடிப்புகளுக்குத் தேவையான ஆவணங்களையும் இழந்துள்ளதால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் முறையான மறுவாழ்வுத் திட்டங்கள் ஏதுமின்றி திடீரென மேற்கொள்ளப்பட்ட இந்த இடிப்பு நடவடிக்கையால், பருவமழை நெருங்கும் வேளையில் இந்தக் குழந்தைகள் திறந்தவெளியில் தங்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட இந்தக் கலைஞர்கள் மற்றும் குடும்பங்களின் மறுவாழ்வை உறுதி செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.