கரூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பிலான தேர்தல் பிரசார கூட்டம் சோகமாக முடிந்தது. கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சோகச் சம்பவம், பொது இடங்களில் கூட்ட நெரிசலைத் தடுக்க போதிய ஏற்பாடுகள் இல்லாததைக் குறிக்கிறது. இதேபோன்று, இந்த ஆண்டு (2025) மட்டும் நாடுமுழுவதும் நடைபெற்ற கோவில் திருவிழாக்கள், அரசியல் நிகழ்வுகள், ரெயில் நிலையங்கள் மற்றும் மகா கும்பமேளா போன்ற நிகழ்வுகளில் 100-க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

முக்கிய நிகழ்வுகள்:

ஜூலை 27, ஹரித்வார்:
மன்சா தேவி கோவிலில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்தனர்.

ஜூன் 4, பெங்களூரு:
ஐபிஎல் வெற்றிப் பேரணியின் போது சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.

மே 3, கோவா:
ஷிர்காவ் கிராமத்தில் வருடாந்திர லைராய் தேவி கோவில் திருவிழாவில் 6 பேர் உயிரிழந்தனர்.

பிப்ரவரி 15, புதுடெல்லி:
ரயிலில் ஏற காத்திருந்த பக்தர்கள் இடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர்.

ஜனவரி 29, பிரயாக்ராஜ்:
மகா கும்பமேளா புனித நீராடல் நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர்.

ஜனவரி 8, திருப்பதி:
வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டிக்கெட் வாங்க பக்தர்கள் இடையே ஏற்பட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 2025 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவங்களில் கூட்ட நெரிசல் உயிர் இழப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ள நிலையில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.