கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நடந்த தவெக பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், இன்று (மார்ச் 17) கரூர் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகிறார். ஏற்கனவே நேற்று முன்தினம் (மார்ச் 15) தவெக தலைவர் விஜய்யிடம் சுமார் 7 மணி நேரம் துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையின் போது, “கூட்ட நெரிசலுக்குத் திட்டமிட்டு சதி செய்யப்பட்டது” என்றும், “பாட்டிலுக்கு 10 ரூபாய்” எனப் பாடியபோது செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் இடையூறு செய்ததாகவும் விஜய் தரப்பு சில முக்கியப் புகார்களை முன்வைத்ததாகத் தெரிகிறது.

​இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் விதமாகவும், கரூரில் நடந்த சம்பவத்தின் பின்னணி குறித்தும் விளக்கம் அளிக்கவே செந்தில் பாலாஜிக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ல் நடைபெறவுள்ள நிலையில், இந்த சிபிஐ விசாரணை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “எங்களுக்குத் தொடர்பு இல்லை” என செந்தில் பாலாஜி தரப்பும், “திட்டமிட்ட சதி” என தவெக தரப்பும் முட்டி மோதிக்கொள்ளும் இந்த விவகாரம், டெல்லி விசாரணையில் என்ன மாதிரியான திருப்பத்தைத் தரப்போகிறது என்பதே இப்போதைய மிகப்பெரிய எதிர்பார்ப்பு