தமிழகத்தில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்த கூட்டுறவு துறையின் மூலம் செயல்பட்டு வரும் பசுமை பண்ணை நுகர்வோர் அங்காடிகள் மூலம் கொள்முதல் விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்துள்ள காரணத்தால் சென்னையில் சில்லரை விற்பனையில் 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றதால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தற்போது தக்காளி கிலோ 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இருந்தாலும் ஏழை மக்களால் இவ்வளவு விலை கொடுத்து வாங்க முடியாது என்ற காரணத்தால் அரசு கூட்டுறவு காய்கறி கடைகளில் கிலோ தக்காளி 38 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றது. ஒருவருக்கு இரண்டு கிலோ தக்காளி வழங்கப்படுகிறது. வெங்காயம் மற்றும் உருளை உள்ளிட்ட காய்கறிகளும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.