புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், மாநில அந்தஸ்து மற்றும் போதிய நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் முதல்வர் ரங்கசாமி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதனால் அவர் கூட்டணியிலிருந்து விலகக்கூடும் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பலமாக அடிபட்டது. இந்நிலையில், பாஜகவின் தேசிய செயல் தலைவர் நிதின் நபினை இன்று நேரில் சந்தித்த ரங்கசாமி, அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

​இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, என்.ஆர். காங்கிரஸ் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே நீடிக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் மூலம் நிலவி வந்த அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் வளர்ச்சி மற்றும் மாநில உரிமைகளை வென்றெடுக்கத் தொடர்ந்து கூட்டணியாகச் செயல்படுவோம் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.