கரூர் மாவட்டத்தில் காங்கிரஸ் மகளிரணிப் பொறுப்பாளராக பணியாற்றி வந்த கவிதா, திமுகவில் இணைந்ததாக திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவால் கட்சித் தரப்பில் அதிருப்தி ஏற்பட்டது.

கூட்டணிக் கட்சி உறுப்பினரை திமுகவில் இணைத்தது தவறான நடைமுறையென காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, செந்தில்பாலாஜியின் அந்த ட்வீட் பின்னர் நீக்கப்பட்டதது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இன்று (செப்.25) கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும்போது, ஒருங்கிணைப்பு இல்லாமல் ஒரு நிர்வாகியை திமுகவில் இணைத்தது சரியானது அல்ல.

இது கூட்டணிக்கே மோசமானது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலினுக்கே நெருக்கடி ஏற்பட்டுள்ளது” எனக் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம், எதிர்காலத்தில் கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.