கடலூர் மாவட்டம் புவனகிரியில், அதிமுகவின் பலத்தைப் பெருக்கும் வகையில் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் விழா நேற்று (டிசம்பர் 28) மிக எழுச்சியாக நடைபெற்றது.
புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும், கடலூர் (மேற்கு) மாவட்டச் செயலாளருமான ஏ. அருண்மொழித்தேவன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அதிமுக முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மாவட்டச் செயலாளருமான சி.வி.சண்முகம் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களை வரவேற்றார்.
திமுக, பாமக மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்குக் கட்சித் துண்டு அணிவித்துச் சி.வி.சண்முகம் வரவேற்றார். பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கினால் அதிருப்தியடைந்துள்ள மக்கள், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை மீண்டும் அரியணையில் ஏற்றத் தயாராகிவிட்டனர் என்பதற்கு இந்தச் சேர்க்கையே சாட்சி என்று குறிப்பிட்டார். புவனகிரி தொகுதி அதிமுகவின் கோட்டையாகத் திகழ்வதை இந்த நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளதாக நிர்வாகிகள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
