ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டம் ரத்தன்கர் பகுதியில் நடந்த  பயங்கர சம்பவத்தில், இந்திய விமானப்படையின் ஜாகுவார் (Jaguar) போர் விமானம் ஒன்று விமானப்பயிற்சிக்கிடையே வான்வெளியில் திடீரென சிக்கல் ஏற்பட்டு, தடுமாறியபடி பறந்து வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த இரண்டு பைலட்டுகளும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் விழுந்த இடத்தில் தீப்பற்றிய நிலையில், அருகிலுள்ள கிராம மக்கள் தங்களால் முடிந்த வரையில் தீயை அணைக்க முற்பட்டனர். தொடர்ந்து போலீசாரும், விமானப்படை மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மிகுந்த சிரமத்துடன் இடிபாடுகளிலிருந்து விமானிகள் சடலங்களை மீட்டனர்.

இந்த விபத்து குறித்து இந்திய விமானப்படையினர் விசாரணை தொடங்கியுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரான லெப்டினண்ட் லோகந்தர் சிங் குறித்த தகவல் மிகவும் வேதனையூட்டுவதாக உள்ளது. அவருக்கு கடந்த மாதம்தான் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மகனை முதன்முறையாக பார்க்க, குடும்ப விடுப்பு எடுத்து வீட்டிற்கு சென்றவர், ஜூலை 1-ஆம் தேதி தான் மீண்டும் பணியில் சேர்ந்திருந்தார்.

ஆனால், சற்று நேரத்தில் நடந்த இந்த விபத்தில் அவர் உயிரிழந்த செய்தி அவரது குடும்பத்தினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய விமானப்படையின் இந்த துயர சம்பவம் குறித்து பிரதமர் மற்றும் மத்திய பாதுகாப்பு துறை சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.