
மும்பை அருகே மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பிறந்த குழந்தைக்கு இஸ்லாமிய தம்பதியினர் மகாலட்சுமி என்று பெயர் சூட்டியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அருகே உள்ள மிராரோடு பகுதியில் வசித்து வரும் பாத்திமா காதுன் நிறைமாத கர்ப்பிணியாக கோலாப்பூருக்கு சென்றுள்ளார். இவர் பிரசவத்திற்காக கடந்த ஆறாம் தேதி கணவருடன் கோலாப்பூரில் இருந்து மும்பைக்கு மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பினார்.
இந்த நிலையில் கழிவறை சென்ற போது பாத்திமாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அங்கேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்த நிலையில் சக பெண் பயணிகள் அவருக்கு உதவி செய்தனர். இது குறித்து ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் ரயில் கர்ஜத் வந்தவுடன் ரயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் தாய் மற்றும் சேயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மூன்று நாட்களுக்குப் பின்னர் அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.
இந்த நிலையில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் பிறந்த குழந்தைக்கு மகாலட்சுமி என்ற பெயரை பெற்றோர்கள் சூட்டினார். ரயிலில் திருப்பதியில் இருந்து மகாலட்சுமி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தவர்கள் தான் தனது குழந்தையை பார்த்து கோவிலுக்கு செல்லும் முன்பே ரயிலிலேயே மகாலட்சுமியின் தரிசனம் தங்களுக்கு கிடைத்து விட்டதாக கூறியதாகவும் அதனால் தான் குழந்தைக்கு மகாலட்சுமி என பெயர் சூட்டியதாகவும் பாத்திமா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.