மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ரபேல் பகுதியை சேர்ந்த தம்பதி முகேஷ் – ஜோதி சோனார். இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் ஜூலை 9 அன்று ஜூகு கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டனர். ஆனால் அங்கு அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் தடை விதிக்கப்பட்டது. இதை அடுத்து அவர்களது திட்டத்தை மாற்றி குழந்தைகளுடன் பாந்த்ரா துறைமுகத்திற்கு சென்றனர்.

அங்கும் கடல் சீற்றம் அதிகமாகவே இருந்த நிலையில் முகேஷ் – ஜோதி தம்பதியினர் கடற்கரையின் சிறிது தூரத்தில் அமைந்திருந்த பாறையில் ஜோடியாக அமர்ந்து புகைப்படம் மற்றும் காணொளி எடுத்துக் கொண்டிருந்தனர். குழந்தைகள் சந்தோஷமாக போஸ் கொடுத்து கொண்டிருந்த தங்களின் பெற்றோரை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென வந்த ராட்சச அலை கைகோர்த்தபடி இருந்த தம்பதியை நிலைகுலையச் செய்தது. இதை பார்த்த குழந்தைகள் மம்மி மம்மி என்று கதறுவது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

அங்கிருந்தவர்களின் முயற்சியில் முகேஷ் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஜோதியை மீட்க தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்தவர்கள் கடுமையாக முயற்சி செய்தும் குழந்தைகளின் தாயை உயிருடன் மீட்க முடியவில்லை. அவரது உடல் ஜூலை 10 அன்று கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தைகள் கண்முன்னே தாய் கடல் அலையில் சிக்கி காணாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.