போக்சோ’ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட 15 வயது சிறுவனுக்கு ஜாமீன் கோரும் மனு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த சிறுவனுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-ன் கீழ் கற்பழிப்பு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் அலோக் அரதே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறுவனுக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டதோடு, முக்கியமான கருத்துக்களையும் வெளியிட்டனர். அவர்கள் கூறியதாவது: “இளம் பருவத்தினர் மீது குற்றச்சாட்டுகள் எழாமல் தடுக்க, குழந்தைகளுக்கு மிகச் சிறு வயதிலிருந்தே பாலியல் கல்வி கற்பிக்கப்படுவது அவசியம். இது 9-ம் வகுப்பிலிருந்து இல்லாமல் அதற்கும் முன்னரே, கல்வி முறைமையில் இதை ஒரு பாடமாக சேர்க்க வேண்டும்.
அப்போதுதான், பருவ வயதில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் குறித்து மாணவர்கள் சரியாக புரிந்துகொள்வார்கள். அதனைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய எச்சரிக்கை மற்றும் கவனங்களைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படும். இதற்காக உரிய கல்வி மற்றும் சமூக அதிகாரிகள் தங்களது கவனத்தைச் செலுத்தி, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் பள்ளி பாடத்திட்டங்களில் பாலியல் கல்வி ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றும் அப்போதுதான் சிறுவயதில் குற்றங்கள் குறையும் என்றும் இதனை மாணவர்கள் சரியான முறையில் புரிந்து கொள்ளவது அவசியம் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினார்..
