
நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பணம் என்பது முக்கிய தேவையாக உள்ளது. நம் வயதிற்கு ஏற்றது போல பணத்தின் தேவையும் மாறுபடும். முதுமை காலத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கையை வாழ இப்போதே நாம் பணம் சேமித்து வைப்பது நல்லது. அதற்காக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு இந்திய தபால் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம். இதில் முதலீட்டாளர்களுக்கு மாத வருமானம் கிடைக்கின்றது. தபால் துறையின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஓய்வுக்குப் பிறகு வழக்கமான மாத வருமானத்தை வழங்குகின்றது.
இந்த திட்டத்தில் தற்போது முதலீடு செய்பவர்களுக்கு 8.2% வட்டி வருமானம் கிடைக்கும். மற்ற அரசு திட்டங்களுடன் ஒப்பிடும்போது இது அதிக வட்டியை வழங்கக்கூடிய சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தில் அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2,46,000 ரூபாய் வட்டி கிடைக்கும். இந்தத் தொகையை மாதம் தோறும் கணக்கிட்டால் 20 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
திட்டம் முதிர்ச்சியடைந்த பிறகு மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம். 55 முதல் 60 வயதுக்குள் விருப்ப ஓய்வு பெறுபவர்களும் இந்த சலுகையை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க அருகில் உள்ள தபால் அலுவலகம் அல்லது வங்கிக்கு சென்று விண்ணப்பித்து பயன்பெறலாம்.