தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வின் முடிவுகள் உடனடியாக வெளியிட வேண்டும் என பா.ம.க தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு 7,300 பேரை தேர்வு செய்வதற்கான நான்காம் தொகுதி தேர்வு கடந்த வருடம் மார்ச் மாதம் 30 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு ஜூலை 24-ஆம் தேதி நடத்தப்பட்டது.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருந்த அறிவிக்கையின்படி, ஜூலை மாதம் நடத்தப்பட்ட நான்காம் தொகுதி தேர்வுக்கான முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டிருக்க வேண்டும். அதேபோல் அதே மாதம் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டு நவம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணைகள்  வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தேர்வுகள் நடத்தப்பட்டு 7 மாதங்கள் ஆகியும் இன்னும் அதற்கான முடிவுகள் வெளியிடப்படவில்லை. மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான விஷயத்தில் தேர்வாணையம் இவ்வளவு அலட்சியமாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. ஒரு போட்டி தேர்வினை எழுதிய மாணவர்கள் அதன் முடிவை அறிந்தால் தான் அடுத்த போட்டி தேர்வுக்கு முழு மனதுடன் தயாராக முடியும்.

இதுபோன்ற நிலையில் ஒரு தேர்வை அறிவித்து நடத்தி முடிவுகளை அறிவிப்பதற்கு ஓர் ஆண்டை தேர்வாணையம் எடுத்துக் கொள்வது மாணவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அதனால் நான்காம் தொகுதி பணிகளுக்கான போட்டியிட போட்டி தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட வேண்டும். மேலும் இனிவரும் காலங்களில் ஓராண்டு ஓர் அடுக்குக் கொண்ட போட்டி தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடுவதில் தொடங்கி பணியமன ஆணை வழங்குவது வரையிலான அனைத்து நடைமுறைகளும் ஐந்து மாதங்களில் முடிக்கப்பட வேண்டும். மேலும் ஈரடுக்கு  தேர்வு கொண்ட முதல் மற்றும் இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை வெளியிடுவதில் தொடங்கி நியமன ஆணை வழங்குவது வரையிலான அனைத்து நடைமுறைகளும் ஒன்பது மாதங்களில் முடிக்கப்படுவதை அரசு பணியாளர் தேர்வாணையம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.