தமிழக சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில், வாக்கெடுப்பு எவ்வாறு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது. பொதுவாக, இத்தகைய வாக்கெடுப்புகள் முதலில் ‘குரல் வாக்கெடுப்பு’ (Voice Vote) மூலமே நடத்தப்படும். இதில் உறுப்பினர்களின் சத்தத்தை வைத்து முடிவுகள் அறிவிக்கப்படும். ஆனால், இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினால், எம்எல்ஏ-க்கள் தனித்தனியாக எழுந்து நிற்க வைக்கப்பட்டு அவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படும்.
இன்றைய சூழலில் அரசியல் களம் சூடாக இருப்பதால், குரல் வாக்கெடுப்பு இன்றி நேரடியாகவே ‘எண்ணிக் கணித்தல்’ (Division) முறையில் வாக்கெடுப்பு நடத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒவ்வொரு எம்எல்ஏ-வும் தனது ஆதரவை அல்லது எதிர்ப்பைத் தெளிவாகப் பதிவு செய்ய வேண்டும். இந்தப் பதிவுகள் அனைத்தும் சபாநாயகரிடம் வழங்கப்பட்டு, பின்னர் அதிகாரப்பூர்வமாகப் பெரும்பான்மை குறித்த அறிவிப்பு வெளியாகும். தமிழகமே இந்த வாக்கெடுப்பின் முடிவை நோக்கித் திக் திக் நிமிடங்களுடன் காத்துக்கொண்டிருக்கிறது.
