தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள ஒரு கோரச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குரங்குத் தொல்லையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பஞ்சாயத்து நிர்வாகம் லட்டுவில் விஷம் கலந்து வீசிச் சென்றதாகக் கூறப்படுகிறது. விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் அஸ்வினி நந்தன், தரையில் கிடந்த அந்த விஷ லட்டுவை இனிப்பு என நினைத்து ஆசையாகச் சாப்பிட்டுள்ளான்.

மேலும் சிறிது நேரத்திலேயே உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவனைப் பெற்றோர் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்தப் பிஞ்சு உயிர் பரிதாபமாகப் பிரிந்தது. பஞ்சாயத்து ஊழியர்களின் பொறுப்பற்ற இந்தச் செயலால் ஒரு குடும்பத்தின் எதிர்காலமே இருண்டு போயுள்ளது. குரங்குகளைக் கொல்ல லட்டுவில் விஷம் வைப்பது போன்ற ஆபத்தான முறைகளைக் கையாண்டது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் உயிரிழந்த சிறுவன் அஸ்வினி நந்தன் அந்தத் தம்பதியரின் ஒரே மகன் என்பதுதான் சோகத்தின் உச்சம். அதிகாரிகளின் அஜாக்கிரதையால் நிகழ்ந்த இந்தப் படுகொலைக்கு நீதி கேட்டுப் பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் போராடி வருகின்றனர். ஒரு உயிரைக் காக்க வேண்டிய நிர்வாகமே ஒரு பிஞ்சு உயிரைப் பறிக்கக் காரணமாக அமைந்திருப்பது வேதனையின் உச்சமாகும்.