
இந்த உலகில் இயற்கையாக காணப்படும் ஒவ்வொன்றை பார்க்கும் போதும் நமக்கு ஏதோ ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். அதிலும் குறிப்பாக பூக்களை பார்க்கும் போது இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். இயற்கையில் காணப்படும் பூக்களின் மனம், அழகு மற்றும் நிறம் உள்ளிட்ட விஷயங்கள் கல்லையும் கரைய செய்யும் என்பார்கள். அதன்படி காலை எழுந்ததும் வீட்டின் முற்றத்தில் இருந்து வெளியாகும் ரோஜா மற்றும் மல்லி ஆகிய மலர்களின் வாசனையை சுவாசிக்கும் போது மனதிற்கு அப்படி ஒரு இதமாக இருக்கும்.
ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும் நிலையில் அமைப்பால் விசித்திரமான பூக்களும் இந்த இயற்கையில் நிறைந்துள்ளன. அதன் வடிவம், அமைவிடம் மற்றும் நிறம் இப்படி அனைத்திலும் வித்தியாசமாக இருக்கும். அதன்படி தற்போது வைரலாகும் பூ தான் குரங்கு பூ. குரங்கு பூ என்று அழைக்கப்படும் பூக்கள் ஆர்க்கிட் பெரிய குடும்பத்தை சேர்ந்தவை.
இதில் சுமார் 26 ஆயிரம் இனங்கள் உள்ளன. இந்த பூக்களின் சிறப்பே கண்கவர் வண்ணங்களும் வித்தியாசமான அமைப்புகளும் தான். தென் அமெரிக்க நாடுகளான பெரு, ஈக்வடார் போன்ற இடங்களில் உள்ள காடுகளில் மட்டும் இந்த குரங்கு பூக்கள் வளர்கின்றன. மங்கி ஆர்க்கிட் என்று அழைக்கப்படும் இந்த பூக்கள் பார்ப்பதற்கு குரங்கின் முக அமைப்பில் இருக்கும். இந்த குரங்கு பூவில் சுமார் 120 வகைகள் உள்ளது. இவை பார்ப்பதற்கு இளம் சிவப்பு, அடர் சிவப்பு, மஞ்சள் என்று வெவ்வேறு வண்ணங்களில் காணப்படும்