உத்தரப் பிரதேச மாநிலம் இடாவா ரயில் நிலையத்தில், காவி உடை அணிந்த முதியவர் ஒருவரை இருவர் சிகையைப் பிடித்து தரதரவென இழுத்துச் செல்லும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயில் நிலைய காத்திருப்பு அறையில் தேவேந்திர பாபு என்ற அந்த முதியவர் உணவு சாப்பிடும்போது அங்கே குப்பைகளை வீசியதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த ரயில் நிலைய துப்புரவுப் பணியாளர்களான விக்கி ஜா மற்றும் சிவக்குமார் ஆகிய இருவரும் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

​இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றிப்போக, ஆத்திரமடைந்த அந்த ஊழியர்கள் முதியவர் என்றும் பாராமல் தேவேந்திர பாபுவின் குடுமியைப் பிடித்து இழுத்துத் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் அங்கிருந்த பயணிகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மக்களின் கண்டனத்தைப் பெற்ற நிலையில், ரயில்வே போலீஸார் (GRP) உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட இரண்டு துப்புரவுப் பணியாளர்களையும் கைது செய்துள்ளனர். குப்பையை அகற்ற வேண்டியவர்களே ஒரு முதியவரைத் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.