நாம் தினமும் வீடுகளிலும் தெருக்களிலும் தூக்கி எறியும் பயன்பாடற்ற பிளாஸ்டிக் பாட்டில்களையும் கழிவுகளையும் பார்க்கும்போது நமக்கு அருவருப்பும் கவலையும்தான் மேலிடும். ஆனால், அதே பிளாஸ்டிக் கழிவுகளை ஒரு பெரும் வாய்ப்பாகப் பார்த்து, இன்று மாதம் 40 லட்ச ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் தொழிலதிபராக உருவெடுத்துள்ளார் ஒரு இந்திய வாலிபர்.
குடும்ப விழா ஒன்றில் தனது உறவினரின் கையில் இருந்த விலையுயர்ந்த ‘ரோலக்ஸ்’ கடிகாரத்தைப் பார்த்து வியந்த ஒரு இளைஞர், அவரிடம் என்ன தொழில் செய்கிறீர்கள் என்று கேட்டபோது, “நான் பிளாஸ்டிக் வியாபாரம் செய்கிறேன்” என்று மிகவும் சாதாரணமாகப் பதிலளித்துள்ளார்.
அந்தச் சாதாரண பதிலுக்குப் பின்னால் ஒளிந்திருந்த பிரம்மாண்டமான வணிக மாதிரியை அறிந்ததுமே, அதைச் சமூக வலைதளத்தில் பகிர, அது தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்தத் தொழிலின் அடிப்படைச் சூட்சுமம் மிகவும் எளிமையானது, ஆனால் அதில் அடங்கியிருக்கும் உழைப்பு மிக மகத்தானது.
உள்ளூர் கபாடிவாலாக்கள் மற்றும் கழிவு சேகரிப்பாளர்களிடமிருந்து பயன்பாடற்ற பிளாஸ்டிக் கழிவுகளை ஒரு கிலோ வெறும் 13 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு இந்தத் தொழிலதிபர் கொள்முதல் செய்கிறார். பின்னர், தனது தொழிற்சாலைக்குக் கொண்டுவரப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை தரம் பிரித்து, ரசாயனம் மற்றும் தண்ணீரின் உதவியால் சுத்தமாகச் கழுவி, இயந்திரங்கள் மூலம் சிறிய துகள்களாக உடைக்கிறார்.
இந்தச் சுத்திகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளைப் உருக்கி, ‘பிளாஸ்டிக் கிரானுவல்ஸ்’ எனப்படும் சிறிய பிளாஸ்டிக் மணிகளாக மாற்றுகிறார். இந்த மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் துகள்கள், சந்தையில் கிலோ 80 முதல் 90 ரூபாய் வரை பெரு நிறுவனங்களால் போட்டி போட்டுக்கொண்டு வாங்கப்படுகின்றன.
மாதம் ஒன்றிற்குச் சுமார் 50 டன் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் இந்தத் தொழிற்சாலை, இதன் மூலம் மாதம் 40 லட்ச ரூபாய் வரை மொத்த விற்பனையை அடைகிறது. நிச்சயமாக, இதில் இயந்திரப் பராமரிப்பு, மின்சாரக் கட்டணம், தொழிலாளர்களின் கூலி மற்றும் போக்குவரத்துச் செலவுகள் எனப் பல செலவினங்கள் இருந்தாலும், கழிவிலிருந்து பெரும் மதிப்பை உருவாக்கும் ‘வேஸ்ட்-டூ-வெல்த்’ நுட்பம் இதில் கச்சிதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வாகன உதிரிபாகங்கள், பிளாஸ்டிக் குழாய்கள், பேக்கேஜிங் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கும் பல முன்னணி நிறுவனங்கள் இந்த மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் துகள்களையே மூலப்பொருளாகப் பயன்படுத்துகின்றன.
சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், கபாடிவாலாக்கள் மற்றும் ஏழை கழிவு சேகரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும் இந்த வணிக மாதிரி, இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு ஒரு புதிய வழிகாட்டியாக மாறியுள்ளது.
