நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே 8 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்..

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது எக்ஸ் பக்கத்தில், நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் 54 பயணிகளுடன் சென்ற பேருந்து, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் வந்துள்ள செய்தி என்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமுற்றவர்கள் அனைவரும் விரைந்து குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசு சார்பில் நிவாரண உதவி வழங்கவும், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

குன்னூர் அருகே பேருந்து கவிழ்ந்து 8 பேர் பலி :

தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து  57 சுற்றுலா பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இன்று மாலை நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் ரோட்டில் 9 வது கொண்டை ஊசி வளைவில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் சிக்கிய பயணிகளில் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் நிதின் (வயது 15) , தேவி கலா (வயது 42), முருகேசன் (வயது 65), முப்பிடாதி (வயது 67) , கௌசல்யா (வயது 29), இளங்கோ (வயது 64), ஜெயா (வயது 50), தங்கம் (வயது 40) ஆகிய 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.