குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்களில் 40 பேர் நலமுடன் உள்ளனர் என டிஐஜி சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து  57 சுற்றுலா பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இன்று மாலை நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் ரோட்டில் 9 வது கொண்டை ஊசி வளைவில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் சிக்கிய பயணிகளில் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் நிதின் (வயது 15) , தேவி கலா (வயது 42), முருகேசன் (வயது 65), முப்பிடாதி (வயது 67) , கௌசல்யா (வயது 29), இளங்கோ (வயது 64), ஜெயா (வயது 50), தங்கம் (வயது 40) ஆகிய 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 1077, 0423 2450034, 94437 63207 என்ற உதவி எண்களில் விபத்து குறித்த தகவல்களை பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது

இதனிடையே நீலகிரி குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.குன்னூர் அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து உயிரிழந்த 8பேரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்தார்.

மேலும் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கா. ராமச்சந்திரன் அவர்களை விபத்து நடந்த இடத்தில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்தவும், மேலும் இவ்விபத்தில் படுகாயம் மற்றும் லேசான காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இந்நிலையில் குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்களில் 40 பேர் நலமுடன் உள்ளனர் என டிஐஜி சரவண சுந்தர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், விபத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் அனைவருக்கும் உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. மீட்கப்பட்டவர்களில் சிலர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்ததாக தெரிவித்துள்ளார்.