
கோயம்புத்தூர் மாவட்டம் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஈட்டியார் எஸ்டேட் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டை சுற்றி குடியிருப்புகள் உள்ளது. இந்த நிலையில் வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதியில் நுழைந்து அட்டகாசம் செய்து வரும்.
அதிலும் யானைகள் அதிக அளவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. வால்பாறை அருகேயுள்ள இடதுகரை என்ற கிராமத்தில் மேரியம்மாள்(60) என்ற வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வந்தார். வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று இடதுகரை பகுதியில் சுற்றி கொண்டிருந்தது.
அப்போது அது மேரியம்மாளை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அங்கிருந்த மற்றொரு முதாட்டி தப்பி ஓட முயற்சி செய்தபோது காட்டு யானை அவரை தாக்கியது. அதில் அந்த மூதாட்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினரும், போலீசாரும் காயமடைந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர். பின்பு விபத்தில் உயிரிழந்த மூதாட்டி மேரியம்மாவை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அனைவரும் பெரும் பீதியில் உள்ளனர்.