கடலூர் மாவட்டத்தில் உள்ள கேப்பர் மலை மற்றும் திருவந்திபுரம் மலைப்பகுதியில் இருந்து கடலூர் மாநகராட்சி பகுதிக்கு ராட்சச குழாய் மூலம் குடிநீர் கொண்டுவரப்படுகிறது. இந்த குடிநீர் அந்தந்த பகுதிகளில் இருக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடலூர் செம்மண்டலம் தீபன் நகர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து மஞ்சக்குப்பம் வில்வ நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

நேற்று செம்மண்டலம் நான்கு முனை சந்திப்பில் சாலைக்கு அடியில் இருந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகளும், குடிநீர் கிடைக்காமல் பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அத்தியாவசிய தேவையான குடிநீரை பொதுமக்களுக்கு தடை இன்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.