அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமூக ஊடக தளம் X வழியாக வெளியிட்ட ஒரு AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோ தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், “கிங் டிரம்ப்” என்று குறிக்கப்பட்ட போர்விமானத்தை டிரம்ப் ஓட்டிச் செல்வது, கிரீடம் அணிந்திருப்பது, மேலும் ஜனநாயக ஆதரவாளர் ஹாரி சிசன் மீது விமானத்திலிருந்து மலம் வீசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோ, டிரம்ப் கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற “No Kings” என்ற ஆர்ப்பாட்டங்களுடன் ஒரே நாளில் பதிவிடப்பட்டுள்ளது. டைம்ஸ் சதுக்கம் மீது கழிவுகள் விழும் காட்சியுடன் முடியும் இந்த நையாண்டி வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகியுள்ளது.
22 வயதான ஹாரி சிசன், டிக்டோக் தளத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டவர். 2024 அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹாரிஸுக்கு ஆதரவாகவும், டிரம்ப் எதிராகவும் வெளியிட்ட உள்ளடக்கங்களால் பிரபலமடைந்த அவர், டிரம்ப் ஆதரவாளர்களின் நையாண்டிக்கு அடிக்கடி இலக்காகியுள்ளார்.
இந்த வீடியோ குறித்து இணையத்தில் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. டிரம்ப் ஆதரவாளர்கள் இதை நகைச்சுவையாகக் கருதியிருக்க, பலரும் பதவியில் உள்ள அதிபர் ஒருவரிடமிருந்து இத்தகைய “அபத்த நகைச்சுவை” வெளிப்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
JUST IN: President Trump shares an AI video of him with a crown on dropping poop from a fighter jet on Harry Sisson at a protest.
What a wild time to be alive. pic.twitter.com/0XSDaw0A4D
— Collin Rugg (@CollinRugg) October 19, 2025
அதே நாளில் அமெரிக்கா முழுவதும் 2,700க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற “No Kings” போராட்டங்களில் ஏழு மில்லியனுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஜனாதிபதி அதிகாரங்களை அதிகரித்து, காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
மேலும், கடந்த வாரம் டிரம்ப் இஸ்ரேல் மற்றும் எகிப்தில் நடைபெற்ற “காசா அமைதி உச்சிமாநாட்டில்” கலந்து கொண்டு “போர் முடிந்துவிட்டது” என அறிவித்ததைத் தொடர்ந்து இந்த சர்ச்சை எழுந்துள்ளது.
