காளையை தூண்டிவிட்டு அதனுடன் விளையாட முயன்ற ஆண் ஒருவர், காளை தாக்கியதில் உயிரிழந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது தகவலின்படி, இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை, கொலம்பியாவின் ஃபுன்டேஷன் நகரில் நடைபெற்ற காளைப்போராட்ட (Corraleja) திருவிழாவில் நடந்தது. உயிரிழந்தவர் 35 வயதான யோவானிஸ் மார்க்வேஸ் ஆவார்.

வீடியோவில், மார்க்வேஸ் காளையின் முன் ஓடிச் சென்று சல்டி போடும் முயற்சியில் இருந்தபோது, காளை திடீரென முன்நோக்கி பாய்ந்து தனது கொம்பால் அவரை தாக்கியது பதிவாகியுள்ளது. தாக்கிய பிறகும், காளை மீண்டும் அவரை நோக்கி பாய்ந்து, கொம்பால் குத்தி, மேலே தூக்கி வீசியது. பார்வையாளர்கள் அச்சத்தில் அலறியபடி ஓட, சிலர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆரம்பத்தில் அவர் எழுந்து நன்றாக இருப்பது போல் தோன்றினாலும், இரத்தம் பெருமளவில் வடிந்ததால் சில வினாடிகளில் தரையில் விழுந்தார்.

உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சென்றவுடன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். கொலம்பியாவில் பிரபலமான Corraleja காளைப்போராட்டங்களில், ஸ்பெயின் பாணி போராட்டங்களிலிருந்து மாறுபட்டு, பொதுமக்களும் அரங்கில் காளைகளுடன் நேரடியாக பங்கேற்கின்றனர். பெரும்பாலான நாடுகளில் இத்தகைய நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன. கொலம்பியா காங்கிரஸ்  கடந்த ஆண்டு, வரும் 2027 முதல் காளைப்போராட்டங்களை தடைசெய்யும் என தீர்மானத்தை நிறைவேற்றியது.