இமாசல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பனிப்பொழிவு மிகுந்த பயிர்கார்ஹ்-சாக் பகுதியில் பயங்கர கார் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பனிமூட்டத்திற்கு இடையே சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து ஆழமான சரிவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எனினும், விபத்து நடந்த பகுதி மக்கள் நடமாட்டம் இல்லாத பனிப்பிரதேசம் என்பதால், நேற்று மதிய அளவிலேயே இதுகுறித்த தகவல் உள்ளூர்வாசிகளுக்கு தெரியவந்தது.

விபத்து குறித்து அறிந்த உடனே உள்ளூர் மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) ஹன்ஸ் ராஜ் கூறுகையில்,

“இந்த விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த பகுதி மிகவும் ஆழமான சரிவைக் கொண்டிருப்பதாலும், அங்கு நிலவும் மோசமான வானிலை மற்றும் பனிப்பொழிவு காரணமாகவும் மீட்புப் பணிகளைத் தொடர்வதில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இன்று காலை முதல் மீண்டும் தீவிரமாக நடைபெறும் என்றார்.

மேலும் தொடர்ந்து அந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் மற்றும் முதற்கட்ட விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.