
சென்னை பரங்கிமலை ரயில்வே நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரயில்வே நிலையங்களில் ஒன்றாகும். இங்கு நேற்று கல்லூரி இறுதி ஆண்டு படித்து வரும் 2 மாணவர்கள் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்தனர். இவர்கள் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்த நிலையில் அந்த வழியாக வந்த ரயில் அவர்களின் மீது மோதியது.
இந்த விபத்தில் மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே துடித்து உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் முகமது நபூல் (20), சபீர் அகமது (20) என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.