இன்ஸ்டாகிராமில் @imanebourouis என்ற கணக்கில் பகிரப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையதளவாசிகளின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது. “பிளாக் டெத்” (Black Death) என்று அழைக்கப்படும் உலகின் மிக அதிகமான புளிப்புத் தன்மை கொண்ட மிட்டாயைச் சாப்பிடும் சவால் தான் அது. இந்த மிட்டாயை நாவில் வைத்த அடுத்த நொடியே, மனித முகம் ஒரு சிதைந்த கார்ட்டூன் போல மாறிவிடுகிறது.
வீடியோவில் ஒரு பெண் தனது காரில் அமர்ந்து கொண்டு இந்த மிட்டாயைச் சாப்பிட்டதும், உடலில் மின்சாரம் பாய்ந்தது போலத் துள்ளிக் குதிக்கும் காட்சிகள் காண்போரை அதிர வைக்கின்றன. இது வெறும் புளிப்பு மட்டுமல்ல, உடலின் நரம்பு மண்டலத்தையே ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைக்கும் அதிர்ச்சி எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த மிட்டாயின் மேல் பகுதியில் சைட்ரிக் ஆசிட் (Citric Acid) மிக அடர்த்தியாகப் பூசப்பட்டிருப்பதே இந்த அதீத புளிப்புக்குக் காரணமாகும். புளிப்பு முடிந்துவிட்டது என்று நினைக்கும் வேளையில், அதன் மையப்பகுதியில் இருக்கும் ‘ஃபிஸி சென்டர்’ (Fizzy Center) மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்துமாம். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்துள்ளனர்.
சிலர் இதை வேடிக்கை என்று சொன்னாலும், மருத்துவம் சார்ந்த அறிவுள்ள சிலர் “இவ்வளவு அதிகமான அமிலத்தன்மை கொண்ட பொருட்களைச் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது” என எச்சரிக்கின்றனர். எது எப்படியோ, இந்த மிட்டாயைச் சாப்பிட்ட பிறகு மக்களின் முகபாவனைகள் மாறுவதைப் பார்த்தால் சிரிப்பை அடக்க முடியாது என்பது மட்டும் உண்மை
