ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தின் கனிகாபாடா கிராமத்தில் குடும்ப தகராறு கொடிய விபத்தாக மாறியது. மங்கல்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேர் இதில்  இரண்டரை வயது சிறுமி உட்பட உணவு உட்கொண்ட பிறகு உடல்நிலை மோசமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் கூறுவதுபடி, உணவில் விஷம் கலந்திருக்கலாம் என அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் உமகாந்த் ஓஜா, அவரது மனைவி, அவரின் இரண்டரை வயது பேத்தி, மற்றும் மூன்று உறவினர்கள் அடங்குவர். விஷ உணவு உட்கொண்டவுடன் அவர்களில் ஒருவர் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட துவங்க, உடனடியாக அருகிலுள்ள சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிறிது நேரத்திலேயே மற்ற உறவினர்களும் ஒரேபோல் நோய்வாய்ப்பட்டு, அனைவரும் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மருத்துவமனையில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு காரணம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்த குடும்பத் தகராறுதான் என்று உறவினர்கள் கூறுகின்றனர். உமகாந்த் ஓஜாவின் மகள் ஸ்மிதா ராணி, காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டிலிருந்து வெளியேறியபோது, பல மதிப்புமிக்க பொருட்களையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, குடும்பத்தில் தொடர்ச்சியாக சண்டைகள் ஏற்பட்டதாகவும், இரு தரப்பும் போலீசில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், ஸ்மிதா ராணி தனது குடும்பத்தினரை கொலை செய்யப்போவதாக ஏற்கனவே பலமுறை மிரட்டியுள்ளார் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பின்னணியில், போலீசார் ஸ்மிதா ராணி மீது கொலை முயற்சி எனும் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உணவின் மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உணவில் விஷம் கலப்பது திட்டமிட்ட குற்றம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணை விரைவாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.