உத்தரப் பிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டத்தில், ஒருதலைக் காதலால் இளைஞர் ஒருவர், மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு எரியும் சிதையில் இருந்து சிறுவனின் மண்டை ஓட்டைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சுபான்ஷு என்ற சிறுவன், நீண்ட நாள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். அன்று மாலை அவரது உடல் அப்பகுதியில் உள்ள மயானத்தில் உறவினர்களால் தகனம் செய்யப்பட்டது. சடங்குகள் முடிந்து உறவினர்கள் வீடு திரும்பிய சில மணி நேரங்களில், சுடுகாட்டிற்கு மீண்டும் சென்ற உறவினர் ஒருவர் சிதை கலைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சிதையில் இருந்து சிறுவனின் மண்டை ஓடு மற்றும் சாம்பல் திருடப்பட்டது தெரியவந்தது.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, மொபட்டில் வந்த மூன்று நபர்கள் சுடுகாட்டிற்குள் சென்றுவிட்டு அவசரமாகத் திரும்புவது பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான அந்த வாலிபர், தான் ஒரு பெண்ணை ஒருதலையாகக் காதலிப்பதாகவும், அவரைத் திருமணம் செய்ய எத்தனையோ முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் ஒரு மந்திரவாதியை அவர் அணுகியுள்ளார். அந்த மந்திரவாதி, “புதிதாகத் தகனம் செய்யப்பட்ட உடலின் மண்டை ஓட்டையும் சாம்பலையும் எடுத்து வந்து தந்திரப் பூஜை செய்தால், அந்தக் காதலியும் அவரது குடும்பமும் உன் வசப்படுவார்கள்” என ஆலோசனைக் கூறியுள்ளார்.
இந்தத் தவறான ஆலோசனையை நம்பிய அந்த வாலிபர், தனது நண்பரின் உதவியுடன் சுடுகாட்டிற்குச் சென்று எரியும் சிதையில் இருந்து மண்டை ஓட்டைத் திருடியது விசாரணையில் அம்பலமானது. இதுகுறித்து காவல் ஆய்வாளர் நீரஜ் குமார் கூறுகையில், இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட அந்த வாலிபர், அவருக்கு உதவிய நண்பர் மற்றும் தவறான ஆலோசனைக் கூறிய மந்திரவாதி ஆகிய மூவரையும் கைது செய்துள்ளோம்.
அவர்களிடமிருந்து திருடப்பட்ட உடல் உறுப்புகளின் எஞ்சிய பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார். மேலும் மக்களை உலுக்கியுள்ள இந்தச் சம்பவம், சமுதாயத்தில் இன்னும் வேரூன்றி இருக்கும் மூடநம்பிக்கையின் கோர முகத்தைக் காட்டியுள்ளது.
