ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்குள்ள ஜெயிலில் பன்வர்லால், ரபீக் பக்ரி, அங்கித் பன்சால் மற்றும் கரண் குப்தா ஆகியோர் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டதால் அவர்களை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் அவர்கள் நால்வரையும் போலீசார் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்வதாக கூறிவிட்டு ஒரு சொகுசு ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த ஹோட்டலில் காலை உணவு சாப்பிட்ட நிலையில் பின்னர் தனித்தனியாக அறை எடுத்து தங்கினர்.

பின்னர் அவர்கள் அனைவரும் தங்களுடைய மனைவி மற்றும் காதலிகளை சந்தித்து அவர்களுடன் உல்லாசமாக இருந்தனர். இந்த ஹோட்டலை கரணின் காதலி முன்பதிவு செய்து இருந்த நிலையில் அவர்களுடைய உறவினர்கள் சிலரும் அங்கு வந்திருந்தனர். இவர்கள் காதலிகளுடன் உல்லாசமாக இருந்த நிலையில் மாலை 5.30 மணிக்கு சிறைக்கு செல்ல வேண்டும் என்பதை மறந்து விட்டனர்.

இது உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்த நிலையில் பின்னர் அவர்கள் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்தது. இவர்களுக்கு போலீசார் சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர். அதாவது சில போலீசாருக்கு 25 ஆயிரம் ரூபாயும், சிலருக்கு 5000 ரூபாயும் லஞ்சம் கொடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த கைதிகள் நான்கு பேரையும் கைது செய்த நிலையில் அவர்களுக்கு உடந்தையாக இருந்த 5 போலீசார் மற்றும் அவர்களின் உறவினர்கள் 13 பேர் என கொத்தாக அனைவரையும் கைது செய்தனர்.

மேலும் சிறைக்குள் உல்லாசமாக கைதிகள் இருப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்வதாக கைதிகளை உல்லாசத்திற்கு அனுப்பி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.