பொது இடங்களில் புகைபிடிப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், டாக்ஸி ஒன்றிற்குள் பயணி ஒருவர் புகைபிடித்ததால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், அந்தப் பயணத்தையே அதிரடியாக ரத்து செய்த சம்பவம் தற்சமயம் இணையதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

லக்‌ஷய் மேத்தா என்பவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள இந்த நெஞ்சை நிமிர்த்தும் வீடியோ காட்சிகளில், காருக்குள் அமர்ந்திருக்கும் பயணி ஒருவர் ஓட்டுநரின் அனுமதியின்றி தன்னிச்சையாகச் சிகரெட்டை பற்றவைக்கிறார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், “என்னிடம் கேட்காமல் எப்படிச் சிகரெட் பிடிக்கலாம்? எனது வாகனத்தில் புகைபிடிக்க அனுமதி இல்லை” என்று உடனடியாகக் கண்டித்துள்ளார்.

அதற்கு அந்தப் பயணியோ, “நான் தான் இந்த டாக்ஸியை முன்பதிவு செய்துள்ளேன்; அதனால் புகைபிடிக்க உங்களிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை” என்று ஆணவத்துடன் வாதிட்டுள்ளார்.

பயணியின் இந்த அலட்சியப் பதிலால் கோபமடைந்த ஓட்டுநர், “இது எனது சொந்த கார், இதில் நான் விதிக்கும் விதிமுறைகளைத் தான் பின்பற்ற வேண்டும்; உங்கள் பணம் எனக்குத் தேவையில்லை, தயவுசெய்து காரை விட்டு இறங்குங்கள்” என்று கூறி வண்டியை நிறுத்தியுள்ளார்.

மேலும், “நான் ஒரு டாக்ஸி டிரைவர், உங்கள் வீட்டு வேலையாள் அல்ல” என்று அவர் பயணியின் முகத்திற்கு நேராகப் பேசி காரிலிருந்து வெளியேற்றியுள்ளார்.