பெங்களூருவில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் மாதம் 50,000 ரூபாய் வாடகை செலுத்தி வசிக்கும் இளைஞர் ஒருவர், தனது ஆதங்கத்தை இன்ஸ்டாகிராம் வீடியோவில் பகிர்ந்துள்ளார். நீச்சல் குளம், ஜிம், ஸ்னூக்கர் ஏரியா என அனைத்து வசதிகளும் இருந்தும், வேலைப்பளு காரணமாக அவற்றைப் பயன்படுத்த ஒரு நிமிடம் கூட தனக்கு நேரம் கிடைப்பதில்லை என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். “காசு என்னவோ சம்பாதிக்கிறோம், ஆனால் அதை அனுபவிக்க நேரமும் நிம்மதியும் இல்லை” என்று கூறும் அவர், இந்த ஓயாத உழைப்பை ஒரு ‘எலி ஓட்டம்’ (Rat Race) என வர்ணித்துள்ளார்.
வார நாட்களில் வேலை, வார இறுதி நாட்களில் ஓய்வு என ஓடிக்கொண்டே இருப்பதால், அதிக பணம் கொடுத்துப் பெறும் இந்த சொகுசு வசதிகள் பல நேரங்களில் யாருமே பயன்படுத்தப்படாமல் காலியாகவே கிடப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 4 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில், பெங்களூருவின் வீட்டு வாடகை குறித்த விவாதத்தையும் கிளப்பியுள்ளது. ஒரு பயனர், “நாங்கள் 74,000 ரூபாய் வாடகை கொடுக்கிறோம், உங்களுக்குக் கிடைத்தது நல்ல டீல் தான்” என்று கமெண்ட் செய்ய, பலரும் பெங்களூருவின் எகிறும் வாடகையைக் கண்டு வாயடைத்துப் போயுள்ளனர்.
இதற்கிடையே, பெங்களூருவில் வீட்டைப் போய்ப் பார்ப்பதற்கே (Visit) ஒரு மாத வாடகையை முன்பணமாகக் கேட்ட வீட்டு உரிமையாளர் ஒருவரின் கதையும் இணையத்தில் வைரலாகி வருகிறது. போதிய இடவசதி இல்லாத சிறிய வீடுகளுக்குக் கூட அதிக வாடகை வசூலிப்பதும், தேவையற்ற சொகுசு வசதிகளைக் காட்டிப் பணத்தைப் பிடுங்குவதும் ஒரு வகையான ஏமாற்று வேலை என்று சில நெட்டிசன்கள் தங்களது குமுறல்களைக் கொட்டி வருகின்றனர்.
