
டெல்லியின் பாரத் நகர் பகுதியில் உள்ள சங்கம் பார்க் தொழில்துறை வளாகத்தில் இயங்கும் பைக் ஹார்ன் உற்பத்தி தொழிற்சாலையின் உரிமையாளர் ஹர்தீப் சிங் தனது மனைவி ஹர்பிரீத் கவுர், மகன் ஜெகதீஷ் சிங் (16) மற்றும் மகள் ஹர்குல் கவுர் (15) ஆகியோருடன் திங்கள்கிழமை காலை விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நான்குபேரும் மயக்க நிலையில் இந்து ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தம்பதியரின் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது.
ஹர்தீப் சிங் கடந்த வருடம் நேபாளத்தில் இருந்து டெல்லிக்கு வந்து பைக் ஹார்ன் தொழிற்சாலை தொடங்கியிருந்தார். தொழிலில் முன்னேற்றம் இல்லாததால் கடன் சுமை அதிகரித்தது. இதனால் நிதி நெருக்கடியில் இருந்த குடும்பம் தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்தில் இருந்து விஷப் பொருள் கலந்த பிளாஸ்டிக் கிளாஸ், வெளிர் ஆரஞ்சு நிறப் பொடி மற்றும் கண்ணாடி கிண்ணம் கைப்பற்றப்பட்டு, தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தற்கொலைக்கான எந்தக் குறிப்பும் மீட்கப்படாத நிலையில், போலீசார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.