தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தஞ்சை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் இதர வகை கட்டிடங்களில் இருந்து தனியார் கழிவு நீர் வாகனங்கள் மூலமாக எடுக்கப்படும் கழிவு நீரை மாநகராட்சிக்கு சொந்தமான சாலை தெருவில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள கிணற்றில் விட வேண்டும்.

இப்படி கழிவு நீரை விடுவிப்பதற்கு ஒரு வாகனத்திற்கு ஒரு நாளைக்கு நடை ஒன்றுக்கு ஆயிரம் லிட்டருக்கு கீழ் உள்ள வாகனங்களுக்கு ரூ.200 மட்டுமே. அதேபோல் ஆயிரம் லிட்டருக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு நடை ஒன்றுக்கு ரூ.300 கட்டணமாகவும், வருடத்திற்கு ஒரு வாகனத்திற்கு ஒருமுறை மட்டுமே பதிவு, புதுப்பித்தல் கட்டணமாக ரூ.2000 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து லாரி உரிமையாளர்களுக்கும் சாலைக்கார தெருவில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள கிணற்றில் கழிவு நீரை விட வேண்டும். மேலும் பொது வெளியில் கழிவுநீரை விடக்கூடாது. அதனால் இனிவரும் காலங்களில் பொது இடங்களில் கழிவுநீர் விடப்பட்டால் மாநகராட்சி மூலமாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.