கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளட்டியூரில் தீபக் ஈஸ்வரர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் குனியமுத்தூரில் அறை எடுத்து தங்கி உள்ளார். கடந்த 16-ஆம் தேதி தீபக் தங்கி இருக்கும் அறைக்குள் அவருடன் படிக்கும் இரண்டு மாணவர்கள் உட்பட 6 பேர் அத்துமீறி நுழைந்து தீபக்கிடம் கஞ்சா இருக்கிறதா என்று கேட்டனர். அதற்கு தீபக் என்னிடம் கஞ்சா இல்லை என கூறினார். இதனால் கோபமடைந்த 6 பேரும் சத்தம் போட்டால் அடித்துக் கொலை செய்து விடுவோம் என கூறி மிரட்டி அவரை வேறு ஒரு அறைக்கு கடத்தி சென்றனர்.

பின்னர் கஞ்சா விற்பனை மூலம் உனக்கு அதிகமான வருமானம் வருவது எங்களுக்கு தெரியும். 15 லட்ச ரூபாய் கொடுத்தால் தான் உன்னை விடுவோம் என மிரட்டியுள்ளனர். மேலும் தீபக்கிடம் இருந்த 2 லட்ச ரூபாய்க்கும் அதிகமான 3 செல்போன்களை பறித்து விட்டனர். அங்கிருந்து தப்பி தீபக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பணம் கேட்டு மிரட்டிய கல்லூரி மாணவர்கள் ஹரிஷ்(20), செல்டன்(20), கூலி வேலை பார்க்கும் உசேன்(31), சரவணன்(19) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் இரண்டு பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.